Sunday, December 30, 2012

    

                             விவசாயி 

(வாடிய பயிரைக் கண்டு தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிக்கான  கவிதை )


தமிழா  ஊருக்கெல்லாம் உணவிட்டவன் நீ 
தண்ணீர் இல்லா பயிரைக்கண்டு உயிர் விட்டவனும் நீயே 

பாலம் பாலமாய் வெடித்துக் கிடந்த நிலம் பார்க்கையில் 
பாழும் மனம் தாங்காமல் உயிரை மாய்த்தவன் 

தலை குனியும் நெற்கதிருக்காக  
தலை குனியா தன்மானம் கொண்டவன் 

பூச்சியைக் கொல்ல வைத்திருந்த மருந்தில் 
பூஜ்ஜியமாய் போனது உன்  வாழ்க்கை  

காசு பணம் சேர்த்து வைக்காம 
கடன சேர்த்து வச்சவன் 

காவிரியை நம்பின நீ 
கார் மேகத்த நம்பலையே 

சற்றே சிந்தியுங்கள் சகோதரர்களே 
சமூக அமைப்பில் எங்கோ கோளாறு 

பணம் பணமாய் பதுக்கி வைத்தவன் -உன் 
பாதம் தொடும் நாள் தொலைவில் இல்லை 

மாறும் இவ்வுலகில் எல்லாம் மாறும் -நல்ல 
மாற்றம் உனக்கானது என்றாகும் 


உன்னை நம்பு ,இந்த மண்ணை நம்பு ,
உழைப்பை நம்பு ,
உலகம் உனது  என்வார்த்தை நம்பு .







Saturday, November 17, 2012

       தேவதையின் வருகை                


கங்காரு தன் குட்டியை சுமப்பதைப்போல் 
உன் நினைவினுடனே பயணிக்கிறேன் 

மனதை அழுத்தும் உன் நினைவுகளை 
உள்ளம் அழுதும் உணர்த்தமுடிவதில்லை 

எப்படிச் சொல்வது என் ஆழ் மனதின் இம்சையை 
ஏனெனில் நான் ஒரு அகிம்சைவாதி அல்லவா 

அர்த்தத்துடன் பேசின உன் கண்கள் 
அர்த்தமற்று பேசின உன் வார்த்தைகள் 

நீ வார்த்தையில் சிக்கிகொண்ட போதும் 
நான் வாய்ப்பை நழுவவிட்டவன் 

தொடும் தூரத்தில் நீ இருந்தாய் 
நாகரிகம் நாள் பார்த்தது 

நாள் பார்த்து, நாள் பார்த்து,நாள் கடந்து போனது 
நீ எனக்கில்லை என்றானது 

தேவதைக்கு தூது விடத்தெரியவில்லை எனக்கு 
நீ சொன்னாய் 'சொல்லியிருந்தால் உன் வாசல் வந்திருப்பேன் '

கை நழுவிய பொருள் கண்களில் வந்து போக 
இமைகள் மூட மறுக்கும் 

மனம் மெல்ல மறக்கும் அதற்குள் 
மரணம் வந்து போகும் மீண்டும் மறு ஜென்மம் எடுக்கும் . 

Tuesday, November 13, 2012

                   விடியல் 



சூரியன்  ஒளிந்துகொள்ளப்போகிறான் 
மலைமுகட்டின் மங்கலான வெளிச்சத்தில் 
கிளைபரப்பி நிற்கிறான் 
இன்னும் சற்று நேரத்தில்இரவு  தொடங்கிவிடும்
முன்பெல்லாம் நிலாவையும்  நட்சத்திரங்களையும்  
ரசித்த கண்கள் சலித்துப் போகின்றன 
நொடிகள் நத்தை என நகர மணித்துளிகள் 
யுகங்கலென காட்சியளிக்க 
சகித்துக்கொள்ள இயலவில்லை 
எத்தனை நேரம் தான் 
உறக்கம் வராத முன்னிரவிலோ அல்லது 
உறக்கம் கலைந்த பின்னிரவிலோ விழித்திருப்பது 
கண்களில் அயர்ச்சி ,தனிமை 
பயமுறுத்தும் இருள் தாங்கமுடிவதில்லை 
அடுத்தநாள் விடியலைக்கான 
ஆவலுடன் காத்திருக்கிறேன் .

Sunday, October 21, 2012


           மழை

 
உன்னால் நனைந்தும்
தலை துவட்டாத மரங்கள்

மூழ்கும் என உணர்ந்தும்
சிறுவர்கள் விடும் காகித கப்பல்கள்

நனைந்தும் நனையாத
குடையின் சாரல் சுகம்

உன்னால் முத்துக்கள் பூக்கும் பூக்கள்

இறைவன் வரைந்த வட்ட வட்ட ஓவியம்
குளத்தில் பெய்த உன் ஒரு துளி

கடலில் ஆவியாகி வானம் சென்றாலும்
பூமிக்கு மறவாமல் வந்து செல்லும் விருந்தாளி

கொடுப்பது நீ கொள்வது நாங்கள்
இடைத்தரகர் இல்லாத இலவசம் நீ

நீ பொழிந்தால் இந்த பூமி பூக்காடு
நீ மறுத்தால் இந்த பூமி இடுகாடு

Friday, October 19, 2012

 

         இது என்ன காதல்


பார்க்கும் போது சிரிப்பாள்
பார்வையாலே கொல்வாள்

பேசச்சொல்லி கேட்ப்பாள்
பேசாமல் இரசிப்பாள்

நகங்கள் உரசிக்கொள்ள செய்வாள்
நட்பென்று நகைப்பாள்

சுற்றிச் சுற்றிச் வருவாள்
சுற்றம் என சொல்வாள்

கள்ளில் இல்லை போதை அவள்
கண்ணில் உள்ளது போதை

இதழோர சிரிப்பில் என்
இதயம் தொலையும்

மூச்சு முட்ட காதல்
மூச்சு விட்டதில்லை யாரிடமும்

இரகசியமாய் காதல் என்னை
இரகசியமாய் கொல்ளும்

மொட்டவிழ்த்தால்  உதிர்ந்திடுமென காதல்
மொட்டவிழிக்கவில்லையோ பெண்ணே ?



Tuesday, October 16, 2012

 

                  வளையல்

              ( ஒரு மகள் தன் தாய்க்கு எழுதும் கவிதை ) 



சில
வாரங்களாக வளையல்
அணிவதில்லை அம்மா

கவரிங் ஒத்துக்கொள்ளாமல்
கறுத்துப்போனது கைகள்

வெறுங்கையுடன்
காண்கையில்
கவலையில் ஆழ்கிறேன்

என்
கல்லூரி கட்டணத்திற்காக
கழட்டப்பட்டது

நான்
வேலைக்குப் போன
முதல் மாத சம்பளத்தில்
அவளுக்கென்று வாங்கிய வளையல்
அணிய மறுக்கிறாள்

அன்பு ஒன்றும் கடனில்லை பெண்ணே என்கிறாள்
என் கையில் ஆசையாய் அணிவிக்கிறாள் .

Friday, October 12, 2012

       காற்றில் பறந்த கவிதை



மழையின் போது விரியாத குடை மழை நின்றதும் விரிந்ததைப்போல்

ஜன்னல் ஓரம் அமர்ந்திட நினைக்கையில் ஊர் வந்து சேர்ந்ததைப்போல்

நடை சாத்திய பின் கடவுளை தரிசிக்க சென்ற பக்தனைப்போல்

பணம் வந்தும் பத்தியம் இருக்கவேண்டிய நோயாளியைப்போல்

வேலை தேடிச் சென்ற கம்பெனி காணமல் போனதைப்போல் 

காதுக்கம்மல் வாங்க போனபோது கழுத்து சங்கிலி களவாடப்பட்டது போல்

தாகம் எடுக்கையில் தேங்கி கிடக்கும் நீர்  கானல் நீரானதைப்போல்

பிடிக்க நினைக்கையில் பறந்து போன ஒரு  பட்டாம்  பூச்சியைப்போல்

காதலைச்  சொன்னபோது  கல்யாணப் பத்திரிக்கையை   நீட்டியவள்

காற்றில் பறந்தது எனக்கான கவிதை 

Saturday, October 6, 2012


                       பொம்மை



கேட்ட பொம்மையை
வாங்கித்தராமல்
ஏதோ ஒரு பொம்மையை
வாங்கித்தந்த
அப்பாவை திட்டித்தீர்த்தது
அந்நாளில்
இந்நாளில்
பிடிக்கவில்லையென
மகன் தூக்கி எறியும்
பொம்மை சொல்லிவிட்டு போகிறது
ஏதோ .  

Friday, October 5, 2012

                      நிலையாமை             



பெட்டி நிறைய பணம் அடுக்கி அழகு பார்த்தாலும்
சந்தன கட்டையை அடுக்கி வேகவைத்தாலும்
போன உயிர் போன உயிர் தான் உணரவில்லிங்க

என்னனவோ கண்டுபுடிசிங்க குலோநிங்னு பெயர் வச்சிங்க
எழவு விழாம இருக்க என்ன செஞ்சிங்க

முட்டாளுன்னு  அறிவாளின்னு பிரிச்சுப்பார்த்திங்க
சாவுல  ஒண்ணுதான்னு உணரவில்லைங்க

ஒழச்சு ஒட்டிய வயிறு உழைக்காம உப்பிய வயிறு
உயிர் போகையில எல்லாம் ஒண்ணுங்க

மேக்கப்போட்டு மினுமினுன்னு மேனிவைச்சாலும்
உயிர் போகையில நாறுமின்னு உணரவில்லிங்க

இருக்கும் வரைக்கும் ஆகாயத்துல பறந்துபார்தாலும்
மரணம் வந்தா மண்ணுலதான் மக்கிப்போகணுங்க

வாழுரவரை கூட வாழுறவனுக்கு நல்லது செஞ்சுட்டு
மரணம் வந்தா நல்ல கதி அடையவேனுங்க .  

Thursday, September 27, 2012

வாருங்கள் கவிஞர்களே 





கார்கூந்தல் ,நெற்றி கேசம்
வில்லெனபுருவம்
மீன் விழி ,ஓரப்பார்வை
உதட்டுச்சுவை
சங்கு கழுத்து
மேகம் தழுவும் சேலை என ...
பிடி இடை
பாதச்சுவடு
புகழ்ந்தது போதும் கவிஞர்களே
வாருங்கள் கொஞ்சம்
வறுமையின் பக்கம்
பிளாஸ்டிக் பாட்டில் பொருக்குபவன்
எடைக்கு பேப்பர் வாங்குபவன்
சில்லறை வர்த்தகத்தில்
அந்நிய முதலீடு அறியாத
அரை கிலோ நெல்லிக்காய் ,ஐந்து எலுமிச்சை
நான்கு கீரைக்கட்டு விற்கும் பாட்டியின்
100 ரூபாய் முதலீட்டில் என்ன லாபம் ?
கொஞ்சம் வேடிக்கையான பட்டாசு
அதிகம் வினையான பட்டாசு
சாயப்பட்டறையில் சாயம் போன வாழ்க்கை
எந்திரத்தோடு எந்திரமாய் மாறிப்போன தொழிலாளர்கள்
உச்சிவேளை வந்தால் மட்டுமே
வேலை நேரம் முடியும் உழவர்கள்
பட்டினி பொறுக்காத குழந்தையின் அழுகை இவைகளைப்பற்றி
கொஞ்சமாவது நாமும் கவலை கொள்வோம் கவிஞர்களே .

Tuesday, September 18, 2012


         மௌனமாய் கொன்றவள் 
(என் மனைவி மௌனமாய் இருந்தால் என் மீது கோபம் கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் .அப்படி ஒரு தருணத்தில் அவளுக்காக நான் எழுதிய கவிதை )



இப்போதெல்லாம் கோபத்தால்
ஒரு பாறையைப்போல்
இறுகிக்கொண்டிருக்கிறது
உன் முகம்

இலையுதிர் காலம் முடிந்தால்
வசந்தகாலம்
உன் ஊடல் முடிந்தால்
வசந்தம் வருமென காத்திருக்கிறேன்

உன் மனக்குறை சொல்லிவிடு
பகிர்தல் தீர்வின் முதல் படி

ஒவ்வொரு மௌன யுத்தத்திர்க்குப்பின்னும்
சத்தியம் செய்கிறாய்
 "சண்டையிடமாட்டேன்"
எனக்கு தெரியும்
சமாதானக்கொடியை
பத்திரமாக வைத்திருக்கிறேன்

தயவு செய்து
கோபப்படு அல்லது
அழுதுவிடு
சண்டையிடு அல்லது
சாபமிடு

மலரினும் மெல்லியது என் மனம்
தாங்காது  உன்    மௌனம்.
   

Friday, September 14, 2012

      
       ஒரு மகனின் ஏக்கம்



தாயே எனக்கு நீ
தாய்ப்பால் கொடுத்ததில்லை
தாலாட்டு பாடியதில்லை
உன் மடியில் உறங்கியதில்லை
என் பிஞ்சு விரல் உன் சேலை பற்றியதில்லை
தலை கோதிவிட்டதில்லை
தமிழ் சொல்லி தந்ததில்லை
அறு  சுவை உணவை ஊட்டியதில்லை
அம்மா என்று அழுததோடு சரி
அம்மா என்று அழைத்ததில்லை
எப்படி முடியும்
என்னைப்  புறந்தள்ள
இறந்தவள் அல்லவா நீ  

Monday, August 27, 2012

  அம்மா



அம்மா   நான்
அழகா
அலங்கோலமா
குருடா,செவிடா
அறியாமல்
கருப்பையில்
தாங்கிக்கொண்டாய்

நான்
பிறந்தபோது
பிரபஞ்சம்
பார்க்கவில்லை
என் சுவாசம் உணரவில்லை
உன்  வாசம் மட்டுமே உணர்ந்தேன்

என் அழுகையில் தெரிந்துகொண்டாய்
பசியா! தாகமா!

என்
மழலைப்பேச்சை
மொழிபெயர்க்க தெரிந்தவள்
நீ மட்டுமே

பூவை
உலகம் ரசிக்கும்
இந்த தளிரை
ரசித்தவள் நீ

உன்னை
உருக்கி என்
உருவம் செய்தாய்
உன் அருமை
உணரச்செய்தாய் .

Saturday, August 18, 2012

காதலியைக்  கரம் பிடித்தேன்




இந்த பாலைவனம்
பூத்தது உன் நினைவால்

இந்த
துறவி
துறந்தது துறவு
அணிந்தது உன்
அன்பு

என்
விழித்திரையில்
எப்போதும் நீ
விழித்திருக்கிறாய்

ஒரு விமர்சகனை
நினைத்து   அல்லல் படும்
எழுத்தாளன் போல்
உன்னால்  கலங்கிப்போகிறேன்

காதலிக்கும் போது
திருமணம் வேண்டிநின்றோம்
திருமணத்திற்குப்பின்
காதலை யாசித்தோம்

திருமணத்திற்கு   முன்னும் பின்னும்
அதிகம் கோபித்துகொன்டவள்  நீ தான்

நாம் வசதியில் வாழ்ந்தவர்கள் அல்ல
வறுமையிலிருந்து மீண்டவர்கள்

என்னோடு சண்டையிட்டால்
மகிழ்வேன்
உன்னோடு சண்டையிட்டு கொள்கிறாய்

எனக்காக
அதிகம் இழந்தவள் நீ
உனக்காக
எல்லாம் இழந்தவன் நான் .

Friday, July 27, 2012

கவிதை




குழந்தையின்
கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது
அழகான ஓவியம்

அம்மாவின் அழகான
கோலத்தில்
மறைந்திருக்கிறது
 எரும்புத்தீனி

காதலியின் கண்களில்
கண்டுகொள்ள இயலாத
கள்ளத்தனம்

அலங்கரிக்கப்போவது எந்த
அழகியின் கூந்தல் எனகு
கவலைகொள்ளும்
ஒற்றைரோஜா


மலையைத் தழுவும் மேகம்
பெண்ணின் அழகை
மூடச்சொன்ன ரகசியம்

கடவுளுக்கு காணிக்கை
ஊமை ஒப்பந்தங்கள்

தேய்ந்து வளரும் நிலா
தினமும் வந்து போகும் சூரியன்     
இவற்றில் சிக்கித்தவிக்கிறது
எனக்கான  கவிதை .  

Thursday, May 3, 2012

நண்பர்கள் சந்திப்பு

நண்பர்கள் சந்திப்பு 



பத்தாண்டுகள்
கழித்து
கண்டெடுத்தோம்
கல்லூரி காலத்திற்கு பிறகு
கலைந்து போன நண்பர்களை

நகரின் மையப் பகுதியில்
குளிர் சாதன அறையொன்றில்
சோமபானம் சுராபாணம் தவிர்த்த
சுகமான சந்திப்பு

பழைய முகம் தேடினோம்
அறிமுகபடுத்தும் அளவுக்கு
மாறிப்போன சில முகங்கள்
மார்க்கண்டேயனாய்
மாறாத சில முகங்கள்

கட்டிபிடித்தலும்
கண்ணீரில் கரைவதுமாய்
நகர்ந்தன
சில கணங்கள்

அளவற்ற பேச்சினால்
அன்பை பகிர்ந்தோம்

திரும்பி வருகையில்
காதில் ஒலித்துகொண்டே இருந்தது

பிள்ளை இல்லாத ஒரு
நண்பனின் புலம்பல்

வறுமையை ஒளித்து பேசிய ஒரு
நண்பனின் பேச்சு

நான்
காருக்கு
கட்ட வேண்டி
காத்திருக்கும்
தவணை
நினைவில் நிழலாடியது.

Monday, April 30, 2012

உன்னோடு 


நீ பெண்பார்க்க வந்தது
நேற்று நடந்தது போல
நினைவில் வாட்டுது
தேக்கு மரமென நீ இருக்க

சந்தன மரமென நான் மணக்க
உன் ஒற்றை பார்வையில
நான் பொத்துன்னு விழுந்தேன்

சந்தைக்கு வந்ததாய்
சாக்கு போக்கு சொல்லி
சந்திக்க வந்த ஒன்ன
சந்திக்க நான் மறுக்க

விருட்டுன்னு நீ நடக்க
வேதனையில் நான் அழுக

நாம
கல்யாணம் செய்த பின்னே
நான் மட்டும்
பொறந்த வீடு போகயில
சிறுக்கி எவளாவது விரித்த வலையில்
சிக்குவியோன்னு நான்
சீக்கிரமாய் வந்தகதை
சொல்லி சொல்லி
சிரித்தோமே

நண்டும் சிண்டுமாய்
நாலுபுள்ளபிறக்கையில
மண்ணுல தொலச்ச காச
மண்ணுல தேடுறது விவசாயம்னு
திசைக்கொன்னா படிக்க வச்ச

திடீர்னு நீட்டி படுத்த நீ
மீண்டும் எழலையே
சாவுல உன் சாவுநல்ல சாவு


மண்ணு தாங்கினாலும்
மகன் தாங்கலையே
இந்த உசுர கையில புடிச்சு
என்ன செய்ய போறேன்
உன்கூடவே வாரேன்.




Wednesday, March 14, 2012

இயற்கை

இயற்கை 





புல்லாங்குழலுக்கு கட்டுப்படும் காற்று
உன் கைகளுக்குள் அகப்படுமா!

கடல்நீரை குடிநீராக்கும் அறிவியல்
மழையே நீ எங்கு
கற்றாய் என கேட்டதுண்டா !

மரங்களை சாய்த்துப் போடும் காற்று
நாணலிடம் காட்டும் கருணையை
நீ அறிந்ததுண்டா !

பூக்கள் பூப்பெய்தினால் அதன் வண்ணம்
என்ற உண்மையை உணர்ந்ததுண்டா !

மகரந்த சேர்க்கை நிகழ்த்தும்
வண்டுகளை நீ
வாழ்த்தியதுண்டா!

சூரியனும் சந்திரனும்
கண்ணாமூச்சி
ஆடும் அழகை
கண்டதுண்டா!

ஆகாயம் முழுக்க
அள்ளிதெளித்த
நட்சத்திரம் பற்றி
யாரிடமாவது
அதிசயத்ததுண்டா !

வீடு உன் உலகம் என்றால்
அர்த்தமற்றது உன் வாழ்க்கை
உலகம் உன் வீடு என்றால்
அர்த்தமுள்ளது உன் வாழ்க்கை .





Friday, March 9, 2012

காட்சிப்பிழை

காட்சிப்பிழை 


ஆடித்தள்ளுபடி தீபாவளி தள்ளுபடி
ஆண்டுமுழுவதும் தள்ளிவிடும் தள்ளுபடி

இறந்தபின் தரப்படும்
ஆயுள் காப்பீடு

மணிக்கணக்காய் காட்டப்படும்
முடி விளம்பரம்

ஆகாய விமானத்தில்
அழகான பணிப்பெண்ணின் ஒற்றை சிரிப்பு

தரகனின் பேச்சு
தங்கத்தின் விளம்பரம்

மது தரும் மயக்கம்
மங்கையின் அழகு

மொக்கைபோட செலவில்லா செல்பேசி
மிஸ்டுகால் கொடுத்து உருகும் காதலி

காண்பதெல்லாம்
காட்சிப்பிழை .

Wednesday, January 18, 2012

கவிஞன்


                             கவிஞன் 




நிஜங்களில் 
நனையாமல்
நிழலில்
கரைகிறான்.

தொலைந்துபோன
தோழியை
தேடுவதாய்
சொற்களுக்கிடையே
சிக்கிக்கொள்ளும்
வரியைத் தேடுகிறான் .

ஒரு
கருவைத் தாங்குவதைபோல்
சுகமானசுமைகளை
சுமக்கிறான்.

பொம்மையை
கட்டிக்கொண்டு
உறங்கும்
ஒரு மழலையைபோல்
தன் கவிதையின்
நினைவோடு
உறங்குகிறான் .

சுகமோ
துக்கமோ
நிகழ்காலத்தில்
எதிர்காலத்திற்காக
பதிவு செய்கிறான் .

வாழும்போது
பேசப்படாத
தன் கவிதை
வாழ்க்கைக்கு
பிறகாவது
பேசப்படுமா
என்ற
ஏக்கத்துடன்
எழுதுகிறான்
கவிஞன் .

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...