Friday, December 16, 2011

நண்பன்

                                                                நண்பன் 









ஒண்ணா படிச்சோம்
ஒரு தெருவில் குடிஇருந்தோம்

நீ கண்விழிச்சால்
என் வீடு
நான் கண்விழிச்சால்
உன் வீடு

சண்டையும்
சமாதானமும்
நித்தம் வரும்
நட்பை வளர்க்கும்

உன் வீட்டு
தென்னைமரம்
எனக்காக காய்குதுன்னு
என் வீடு வந்து சேரும்

நான்
பட்டணத்தில்
படிப்பை நம்பினேன்
நீ
கிராமத்தில்
உழைப்ப நம்பினாய்

என்
கல்லூரி காலத்தில்
மாதம் தவறி
மழை பெய்தாலும்
வாரம் தவறாது
உன் கடிதம்

வெள்ளாமையில்
வந்த காசில்
வித விதமா
துணி வாங்கி கொடுத்து
கல்லூரியில் என் வறுமையை
மறைச்ச

வேலைக்கு போனதும்
உன்னை
உயரவச்சு பார்க்க
ஆசைப்பட்டேன்

நான்
கல்யாணம் செஞ்சேன்
வேலை இல்ல
வேலை வந்தப்ப
உனக்குன்னு எதுவும்
செய்யல

பங்காளி சண்டை வந்து
பாகம் பிரிக்கையில்
நீ கட்டிய குடிசை
உனக்கில்லைன்னு ஆச்சு

சுவரை இடிக்க
நீ போட்ட கணக்கு
தப்பாச்சு
எமன் போட்ட கணக்கு
சரியாச்சு
சுவர் இடிந்து விழுந்தது
உன் மீது

மண்ணை நேசிச்ச உன்னை
மண்ணுதான் விழுங்கிடிச்சி
நல்லதுசெய்ய
நாள் கடத்திய
பாவி நான் .

Saturday, November 26, 2011

பூமியை வாழவிடு

                                   பூமியை வாழவிடு 





மண்ணும் மரமும்
மழையும் மகத்தானவை
மனிதன் நன்றி
மறந்தவன்.

மனிதன்
மண்ணைச் சுரண்டினான்
மலையைச் சிதைத்தான்
கோபப்படாத பூமிக்கு
கொடுமையைத் தந்தவன்

பூக்களும் காய்களும்
கனிகளும் தந்த
பூமிக்கு
வெறும் காயங்களைத்
தந்தவன் மனிதன்

மண்ணில் பல வகை உண்டு
மனிதனில் பல வகை உண்டு
மண் நல்லவை

மனிதன் நன்றி மறந்தவன்
மண்ணுக்கு வாசனை உண்டு
மனிதனுக்கும் வாசனை உண்டு
மண்வாசனை மட்டும்
நுகரதக்கவை

நீ
வாழவேண்டுமா முதலில்
பூமியை
வாழவிடு

Tuesday, November 15, 2011

தனிமை


தனிமை 


அந்த ஒற்றையடிப்பாதையில்
எத்தனையோ வளைவுகள்
அத்தனையும் காயங்கள்

நத்தை தன் கூடு சுமப்பது போல்
சுமக்க வேண்டி வருமோ என அஞ்சி
வழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களை
கடந்த பின்னும்
என்னுள் சிறு துளியாய்
தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் என
சில நேரங்களில்
சோகங்களில்
கரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்
மழை வேண்டியும்
மழை நாட்களில் வெயில்
வேண்டியும்
நான் நின்றதில்லை
கடவுள் கொடுத்ததை
மகிழ்ச்சியோ துன்பமோ
அப்படியே
அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோ
சுகங்களுக்குபின்னும்
என்னுள்
ஒளிந்துகொண்டிருக்கிறது
சோகமயமான
அந்த ஒற்றையடிப்பாதை .

Thursday, November 3, 2011


பெண்ணின்மனது



எந்த மொழியில்
எழுதப்பட்டது
பெண்ணின் மனது

இதழ்கள் மூட
இமைகள் பேசும்
கதைதான் என்ன

நீ
மெல்லினமா
வல்லினமா

உன் வெட்கம்
சொல்வது
அழகின்
உச்சமா

நீ
ஆடையை திருத்துகிறாய்
அழுக்கானது
என்
மனம்

என்
இழப்பின்
வலியை உணர்வதற்குள்
காதலை
சொல்லிவிடு.

Wednesday, September 28, 2011

காதல் சுவடு

உனக்குன்னு பொறந்தவ
உன் அத்தை மகள்னு
உறவும் சொல்லிச்சு
ஊரும் சொல்லிச்சு

சட்டத்தில் இடமிருக்காம்
பெண்களுக்கு சொத்தில் பங்குண்டாம்

அது தெரிஞ்ச உன் அப்பன்
வழக்கு போட்டான்

என் அப்பன் நகை நட்டு கேட்க
அதோடு சேர்த்து பீரோ, கட்டில்
பாத்திரம் பண்டமுன்னு
ஊரே பார்க்க உன் அப்பன்
அனுப்பி வைச்சான்

வழக்கு நடந்தது
வாய்தா கேட்டு வாய்தா கேட்டு
 பதினைந்து வருசமாச்சு

நீ
சடங்காகி சதைபோட்டு 
 மத மதன்னு வளர்ந்தப்ப 
 என் மனசு 
 தூண்டில் மீனாச்சு 
                                                       
 நீ வாக்கப்பட்டு
வயலூருக்கு போன
சேதியும் வந்தி ச்சு
நான் கல்யாணம் செஞ்சு         
காலமும் நகர்ந்தாச்சு      

வக்கீலுக்கு பணம்
கொடுக்க முடியாம
பஞ்சாயத்தில் சுபமாய
முடிஞ்சிச்சு வழக்கு 

 உங்கப்பனும்  
 எங்க அப்பனும்
 சேர்ந்து
 குலாவுனாங்க

ஒரு மழைநாளில்
நாம் சந்திச்சபோது
நீ சொன்னாயே

முன்னமே புத்தியில்லாம
 நம்ம காதல
 இந்த  முட்டாளுங்க
முறிச்சு  போட்ட்டாங்களேன்னு 

அப்போ உன் முகத்தில் வழிந்தது 
மழை நீரா அது உன் கண்நீரான்னு                         
கலங்கிப்போனேன் நானும் .

1

Thursday, July 7, 2011

தன்னை வியத்தல்


தன்னை வியத்தல் 






கண்ணாடியை
கொத்திச் செல்லும்
குருவிகள்
உணர்ந்ததில்லை
தன் அழகை

எறும்புகள்
என்றும்
உணர்ந்ததில்லை
தன்
அழகான
அணிவகுப்பை

பூக்களின்
நிறமும், மணமும்
அழகை
யார் சொல்லி
பூக்களிடம்
புரிய வைப்பது

சுற்றும் பூமி
சற்றே நின்று போனால்
என்னவாகும் என்பைதை
பூமி அறிந்ததில்லை

உன்
அக
அழகை
கனவுகளும்
புற
அழகை
கண்ணாடியும்
காட்டும் போது
தன்னையே வியந்துகொள்

Monday, June 27, 2011



முதல் காதல் 







உன் பெயர்
தமிழ் என்பதால்
உன்னை நேசித்தேனா?
அல்லது
உன் பெயர்
தமிழ் என்பதால்
தமிழை நேசித்தானா?

மீசை முளைக்கும்
முன்னே காதல்
முளைத்தது

நீ வசிக்கும் தெருவை
நான் நடந்த தூரம்
அளந்து பார்த்தால்
சஹாரா பாலைவனம்
சற்று அதிர்ந்து போகும்

கல்லூரியின்
ஒரு விடுமுறை நாளில்
நான், நீ
உன் அழகுக்கு பொருந்தாத கணவன்
சந்தித்துக் கொண்டோம்
நீ பேசவில்லை
தலைகவிழ்ந்து கொண்டாய்

கடமை முடிந்ததாய்
கர்வப்படும் உன் அப்பாவிடம்
சொல்
சராசரி இந்திய அப்பாக்களில்
அவரும் ஒருவர் என்பதை...

Tuesday, June 7, 2011

யாசகன் மனம் அறிக


                    யாசகன் மனம் அறிக




பசியாத நல்வயிறு
உலகிலில்லை
பசித்த பாழ் வயிறு
உலகில் உண்டு

ஒரு கோடி பணம்
ஆகாரமில்லாத தீவு
ஒரு கவளம் சோறு
உன் வயிறோ
பசித்த வயிறு
எது வேண்டும் உனக்கு
உணவா? பணமா?

அஃறினையாய் இருந்தவரை
உணவுக்கு பஞ்சமில்லை
உயர்திணை யானோம்
உணவுக்கு வழி இல்லை.

நடைபாதை மனிதர்க்கு
முகம் சுளிக்கும் மனிதர்களே
பூமி புரட்டிப் போட்டால்
நீயும் நானும் ஒரே ஜாதி
நினைவில் கொள்க.

நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்



நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்

















நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்
என்னை எதற்கு நீ படைத்தாய்?
ஏன் இன்னும் உயிரோட்டம் கொடுத்தாய்?
மெத்த படிக்க வைத்தாய்
மேதாவியாய் உலவ விட்டாய்
நித்தம் உனை நினைக்க
நீங்காத துன்பம் எனக்களித்தாய்
நீர்க்குமிழிபோல் வாழ்வென்றாய்
எப்பொழுது உடையும் என்பதிலேயே
என் சிந்தையை வைத்தாய்
எனக்கும் உனக்கும் இடையில்
யார் யாரையே வைத்தாய்
அவாகள் உனக்கும் எனக்கும்
எதிரியா? நண்பனா? என
சொல்லாமல் விட்டாய்
வளமான வாழ்வெனக்காட்டி
இருட்டிலேயே தேடவைத்தாய்
உயிருக்கும் உணவுக்குமே போராட்டமாய்
உத்தமன் நீ உயிர் வாழ்வாய் என
ஒரு சொல்லோடு
எனை தனியனாய் விட்டாய்
காதல் எனக்களித்தாய் - அதுவரை
உறவறுத்து காட்டில் தவம் செய் என்றாய்
தவத்தில் நாட்டமில்லை, காதலில் இன்பமில்லை
என்னதான் நினைத்தாய் என்னை!
என்னை எப்படியாகியும் செய்துவிட்டு போ!
நித்தம் உத்தமனாய் வாழ்ந்திட வை இறைவா.

Tuesday, April 5, 2011

நட்பு

நட்பு 



நட்பு
வளர்பிறை மட்டுமே உள்ள
வானம்

உறவுகள் கசப்பாய்
நட்போ இனிப்பாய்

நெல்லிக்கனியை
நட்பிடம் மட்டுமே
கொடுத்தானே அதியமான்.

அங்கவை,சங்கவையை
தங்க வைத்து
தாலிபாக்கியம்
யார் வாங்கிகொடுத்தார்
கபிலர் தானே

தானம் கொடுத்தவன்
தானம் பெற்ற வரலாறு
கர்ணன் துரியோதன்
நட்பல்லவா

வறுமை
வாட்டிய போது
குசேலன்
எங்குச் சென்றான்
தாய் வீடா
மாமன் வீடா
கண்ணணைத் தானே
கண்டான்

“ஈயென இரத்தல்
இழிந்தது”
என்பதால்
மெளனமாய் வந்தான்
குசேலன்

அதிசயித்தான் – தன் வீடு
மாளிகை யானதைக்
கண்டு

மறுக்கவில்லை
உறவுப் புள்ளிகள்
சேர்ந்துதான் என் வட்டம்
ஆனால்
நட்பே நீ
மையப் புள்ளியல்லவா1

மகனின்
நலம் விசாரிப்பு
ஈமெயில் சிக்கனம்
அறுபது வயதிலும்
அருகே அமர்ந்து
ஆறுதல் சொல்வது
நட்பு மட்டுமே.

மெளனம்

மௌனம் 



மொழி அனிச்சை
மெளனம் பயிற்சி
முன்னதை விட
பின்னதே சிரமம்

மனம் ஒருபுறம் பேசும்
வாய் ஒரு புறம் பேசும்
பழுதுபட்ட வானொலியின்
அலை வரிசையைப் போல
குறைந்த பட்சம் ஒரு
வாசலாவது மூடப்படட்டுமே

சமாதான பேச்சு
தொடங்கும் போதுதான்
யுத்தத்திற்கான
விதை விதைக்கப்படுகிறது.

பேசி மகிழ்ந்த
காதலெல்லாம்
கசந்த கதை ஏராளம்
பேசாத காதலே
உன்னதம்

வார்த்தை ஜாலங்கள்
தந்திர மிக்க பேச்சு
அத்தனையும்
மெளனத்தின் முன்
தோற்றுப் போவதில்லையா!

தென்றலும் , புயலும்









உன் மீது

பூ விழும், பூவை
எடுத்துக்கொள்
கல் விழும்
கல்லை எடுத்துக்கொள்
கற்களெல்லாம் பூவாக
மாறும் எனக்கனவு காணாதே

நீச்சலில் எதிர்நீச்சலும்
சுகமே
வாழ்க்கையும்,அனுபவமும்
அப்படியே

யாரும் உன்னிடம்
நடித்தால் கலங்காதே
இறுதிக் காட்சி வரை
ரசித்து விட்டுப் போ

பலவருடத் தோழமை கூட
ஒருநாள்
உன்னைப் பற்றிய கேவலமான
சான்றிதழ் தரக்கூடும்
வாங்கி வைத்துக் கொள்

ஒருநாள் நல்லவிதமான
சான்றிதழ் தரக்கூடும்
அதையும் வாங்கிக் கொள்

இரண்டையும் ஒப்பிட்டுப்பார்
சத்தமாய்ச் சிரித்து விடு
ஏனெனில் இரண்டும் உண்மையில்லை

யாராலும் உனக்கு
மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்க
முடியாது
ஏனெனில்
உனக்கே உன்னால் மகிழ்ச்சியை
தரமுடியாதபோது எப்படி
இன்னொருவரால் முடியும்.

இனிப்பு,கசப்பு,துவர்ப்பு,உவர்ப்பு
இதில் எதை நீக்கினால் சுவை
எல்லாமே சுவைதான்
வாழ்க்கையும் அப்படியே.

உன்னை யாரும் துன்புறுத்த முடியாது
நீ அனுமதிக்காத வரை

மகனே ஒரு நிமிடம்




அன்று
உன்
விரல் பிடித்து
நடக்க பழக்கினேனே
நானோ
இன்று
என்
தள்ளாமைக்கு
தோள் கொடுப்பாய்
என இருந்தேன்

வேறு வழியில்லை
வாக்கிங் ஸ்டிக்
வாங்கிக் கொண்டேன்

என் தோள்மேல் தூக்கி
உன்னை கடவுளை தரிசிக்க
சொன்னேன்
அதனால் தானோ என்னவோ
எனக்கு
அவன்
அருள் கிடைக்கவில்லை

உன்னோடு
பேசிக்கொண்டே இருந்தேன்
நீ பேச்சுப் பழக
இன்று தொணதொணப்பாகிக் போனேனே
உயிர் போகாமல்
இருக்கேனே

ஊரெல்லாம்
கடன்பட்டேன்
உன் உயர்வுக்காக
பெற்ற கடன்
தீர்ப்பாயா?

நீ
சபையில்
உன்
தோளில்
மாலை
என்
தோளில்
நுகத்தடி

மகிழ்ச்சிதான்
மகனே
உன் மனைவி
உன் மகன் ஊர்வலமாய்
நீங்கள்.

எனக்காக
ஒன்றே ஒன்று மட்டும்
செய்
என் பேரனை
நல்ல மகனாய்
வளர்த்து விடு
போதும் எனக்கு.

Saturday, March 26, 2011

பார்வை







திருமணம் செய்தால்
உன்னைப் போல்
ஒருவனைத் தானடா

வகுப்பறையில்
அகநானூறு
நட்த்தும் போது
அகல விழிகளால்
அகழ்ந்தெடுத்தவள் நீ

உன் வீட்டு
விழாக்களுக்கு அழைத்து
உன் தோழிகளிடம்
என்னைக் காட்டி
ஏதேதோ சொன்னாய்

ஆட்டோ கிராஃபின்
கடைசி பக்கத்தில்
காதலை சொல்லியும்
சொல்லாமலும்
கலங்கடித்தவள்

இது
காதலில்லை
இல்லை என நீ
சொன்ன போது
உன்
கலங்கிய
கண்கள் சொன்னது
இது காதலென்று

Friday, January 21, 2011


இரகசியங்கள்







ஒவ்வொரு மனதிலும்
சொல்லக் கூடாத
சொல்லப் படாத
இரகசியங்கள் எனப்பல உண்டு

ஒரு கருமியின்
பணப் பெட்டியைப் போல்
அடிக்கடி திறந்து பார்த்துக்
கொள்வதும் உண்டு

இரகசியங்களில்
நினைத்து நினைத்து
இரசிப்பதும்
நினைவில் வந்து வாட்டுவதும்
இன்னதென்று புரியாத
சோகத்தில் ஆழ்த்துவதுமாய்
நிறைய உண்டு


நண்பனிடம்

சொல்லும் இரகசியம்
மனைவியிடம் சொல்வதற்கில்லை
மனைவியிடம் சொல்லும் இரகசியம்
நண்பனிடம் சொல்வதற்கில்லை

நம்முள் இருக்கும்
இரகசியங்கள்
மண்ணுக்குள் உள்ள
விதைகளாய் –அவைகள் எல்லாம்
விருட்சங்களாய் வானில்
கிளை பரப்பி
காற்றோடு பேசுமோ
அல்லது
மெளனமாய் போகுமோ

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...