Saturday, November 20, 2010

பிரிவு






பிரிவு
ஒரு விபத்தைப் போலவும்
காற்றாடியின் நூல்
பட்டென்று
அறுவதைப் போலவும்
நிகழ்ந்து விடுகிறது.

முந்தைய
நிகழ்வின்
நினைவுகள்
நிழலாய் தொடர்ந்து
வாட்டுகிறது.

பிரிவு ஏற்படாதவாறு
சாத்தியக் கூறுகள்
இருப்பினும்
நிகழ்ந்தே விடுகிறது
பிரிவு

மீண்டும் பழையபடி
தொடங்க இருப்பினும்
கைகளும்
கால்களும்
கட்டப்பட்டு
பிரிவிலேயே
வாழும் படியாகிறது.

பிடித்தோ
பிடிக்காமலோ
நிகழ்வது பிரிவு

வாழ்வின் அடுத்த
கணத்தை
கணிக்க முடியாத
அறிவை
நொந்து கொண்டு
வாழும்
நடைபிணமாய்
மாற்றுகிறது
பிரிவு

மரணத்தை விட
கொடியது என்பதைத்
தவிர-பிரிவைப்பற்றி
வேறென்ன
சொல்ல.

குதிரை




தலைக்கு கீரீடம்
எனினும்
உந்தன் கால்களுக்கே
அவை

உந்தன் நடையில்
ராஜ கம்பீரம்
ஆயினும் உந்தன்
பார்வை கனிவுதான்

ஓடிக் களைத்ததாய்
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னிடமில்லை

முன்வைத்த காலை
பின் வைத்த
ஓர் இழி பிறப்பல்ல நீ

உந்தன்
பிடறி சிலிர்ப்பில்
பெருமிதம் கண்டோம்
நாங்களும்
சிலிர்த்துப் பார்த்தோம்
தோற்றுப் போனோம்

நீ
படுத்து உறங்கி
நான்
பார்த்ததுமில்லை
தூக்கத்திற்கு கூட
இலக்கணம் வகுத்த
உந்தன் உழைப்பு
எனக்கு வியப்பு

நீ
சேணம் பூட்டியதற்காக
வருந்தியதில்லை
உந்தன் பார்வை
கூர்மைதான்

பந்தயம் கட்டியதற்காக
நீ ஓடவில்லை
இதை உணராமானிடரிடம்
கனைத்து சிரித்து பின்
கால் போன போக்கில்
நடப்பாய் இலக்கின்றி

ஆனாலும்
நீ கொடுத்தாய்
உன்னை எட்டுதல்
எனக்கோர் இலக்காய்

Saturday, October 2, 2010

வாழத்தான் வேண்டும்.






சில நேரங்களில்
முத்துச் சிதறல்கள்
என் காலடியில்
கொட்டிக் கிடப்பதாய்
கனவு காண்பேன்
பல நேரங்களில்
சிப்பிகளுக்காக
அலைந்து திரிந்து
கொண்டிருக்கிறேன்.

இலக்கை எட்ட
இரவாய் பகலாய்
நாயாய் அலைவேன்
கோபுரத்தின் கலசம்
மட்டும் பாக்கி
கை கழுவிக் கொள்வேன்.

ஏனோ எல்லா நேரங்களிலும்
வாழ்க்கை தீர்ந்து போனதாய்
வாடிப்போகிறேன்

சில நேரங்களில்
நிழலாய் வந்த சோகம்
நிஜமாய் மிரட்டும்

எப்பொழுதாவது
பூமியைக் கேட்பேன்
எனக்காக மட்டும்
ஏன்? நீ சுற்றுகிறாய்

குளிருக்கும் கோடைக்கும் இடையே
வசந்தம் வருமே
என் வாழ்வில்
மட்டும் ஏன்
கோடையும் குளிரும்

நல்ல சட்டையில்
கறை விழுந்த மாதிரி
நிலவை மறைக்கும்
மேகம் எனக்குள்ளும் உண்டு.

வாளேந்துவேன்
களம் புகுவேன்
முதல் தலை உருண்டதும்
முகம் பொத்தி அழுவேன்.

வானம் பார்த்த பூமிதான்
என் வாழ்க்கை
வரவில்லா உறவுகள்
வரிசை வரிசையாய்
வங்கிக் கணக்கை
விசாரித்துபோகும்

நான் பூமி பார்த்து நடந்தால்
ஏதுமறியாதவன்
நேர்பார்வை பார்த்தால்
கர்வி

அள்ளிக்கொடுப்பேன்
சொல்லிக் கொள்ளாமல் போவான்

எப்பொழுதும் நடப்பேன்
சூரிய வெளிச்சத்தில்
எப்பொழுதும்
என்னுடன் வரும்
நிழல் சோகங்கள்.

காதலும்-கவிதையும்




நீ-என்
வகுப்பறைத் தோழி
ஆசையாய்த் தூண்டும்
அழகு நிலா

அடுத்த நாளே
உன் சிரிப்பையும்
நீ தீண்டாத
உன் தீண்டலையும்-எழுதி
கத்தையாய்
கவிதைகள்
கொடுத்தேன்
ரசிப்பாய் என
இருந்தேன்
சிரித்தாய்

ஒருமாலை
நேரத்தில்
முதலாளியிடம்
யாசகம்
கேட்கும்
ஒரு
தொழிலாளியைப் போல்
என் காதலைச்
சொன்னேன்
ஒரு தலையாட்டலில்
சரி என்றாய்


பிறகு
உறவு வேர்களும்
நட்புக் கிளைகளும்
வெட்டப்பட்ட
போன்சாய்
மரமானேன்

இன்னும்
சில நாட்களில்
மரபணு மாற்றப்பட்ட
பி.டி கத்தரிக்காய் ஆனேன்.

கடைசியாய்
ஒரு நாள்
நீ
என்ன செய்யப் போகிறாய்
என்றாய்

கவிஞன் என்றேன் நான்
சற்றே எரிச்சலுடன்
உன் தொழில்? என்றாய்
கவிதை என்றேன்

பிறகு
என்னை விட்டு
வெகுதூரம்
சென்று விட்டாய்
தனித்து விடப்பட்டோம்
நானும் என் கவிதையும்.

நீர்க்குமிழி









பேசிய வார்த்தைகளும்
பேசாத வார்த்தைகளும்
பேசிக் கொண்டன – இது
காதலின் ஒரு வகை
பற்றிக் கொள்ளுமோ என
பார்வையைத் தவிர்த்தல்
காதலின் புதுவகை
வார்த்தைகள் பரிமாறிக்
கொண்டோம்
சொல்லாமல் விடப்பட்டது
காதல்
நீ பார்வையால் பரிமாறினாய்
நான்
பசியாறினேன்.
காதல் ஒரு
நீர்குமிழி
கையில் ஏந்த முடியாமலும்
காற்றில் உடைந்து விடுமோ
என்ற அச்சத்திலும்
காத்திருக்கிறேன்.


Tuesday, September 7, 2010

பழைய புகைப்படம்










பள்ளிப்பருவத்தின்
வாட்சு தெரிய
முதல் வரிசையில்
நான் நின்ற
புகைப்படம்
பலமுறை
ரசித்தபடம்
தோழியர் முகம்
பார்க்க

பத்தாம் வகுப்பில்
எடுக்கப்பட்ட
நுழைவுத் தேர்வு
புகைப்படம்-நான்
அவனில்லை

பிரியப் போகிறோம்
என்று கூறி
மூன்று நண்பர்களும்
ஒன்றாய் எடுத்தப்படம்
ஒன்றாய்
ஊர்
சுற்றுகிறோம்
வேலையின்றி

கல்லூரிக் காலத்தில்
நானும் காதலியும்
எடுத்தபடம்
என் மீது நம்பிக்கையின்றி
வாங்கிச் சென்றபடம்

கடன் தொல்லையுடன்
கவலை ரேகை
என் முகத்தில் தெரிய
எடுத்த கல்யாண
புகைப்படம்.

எல்லாவற்றையும் விட
தாத்தாவும் பாட்டியும்
சேர்ந்து அமர்ந்த மாதிரி
சேர்த்து அமைக்கப்பட்ட
படம் தெய்வமாய்
காக்கிறது என் மழலைக்
காலம் முதல்



மனிதர்கள்





கட்டித் தழுவும் போதும்
கை குலுக்கும் போதும்
நெகிழ்ந்து போகும்
என் மனசு

அப்போதெல்லாம்
ஆள் அரவமில்லாத
பச்சைப் புல்வெளியில்
இஷ்டம் போல்
புரள்வதாய்
நினைத்துக்கொள்ளும்
என் மனசு

சிரித்து நலம் விசாரிக்கும்
மளிகைக் கடைக்காரர்
சின்னதாய் புன்னகைக்கும்
எதிர்வீட்டுக்காரர்

இன்னும் பூமியில்
எல்லாரும் எல்லாமும்
பிடிக்கும்

நிழல் அடர்ந்தமரம்
மாலை நேரத்து வெயில்
அதிகாலை குளிர்
பேருந்தின் முன்வரிசை
இன்னும் என்னென்னவோ
பிடிக்கும்

கட்டித் தழுவியவனும்
கைகுலுக்கியனும்
நான் தடுக்கிவிழும்போது
சிரிக்கும் போது
அத்தனையும் பொசுங்கிப்போகும்
என் மனசும்தான்.

Tuesday, August 31, 2010

கனவுகள்










பகலில் காண்பதெல்லாம்
உடைதரித்த வேடம்

இரவில் வருவதெல்லாம்
நிர்வாண நிஜம்

கனவுகள் தின்ன தின்ன
நான் இளைக்கிறேன்

வாழ்வில் நிகழ்ந்து விட்ட
சோகமெல்லாம்
துண்டு துண்டாய்
ஊர்வலம் போகின்றன
என் தூக்கத்தில்

என்னைத் துளைத்தெடுத்த
பெண்ணெல்லாம்
ஊர்வலமாய்ப் போகின்றனர்
என் கனவில்
உதறி எழுகிறேன்

என்றோ நிகழ்ந்ததெல்லாம்
ஜீரணமின்றி
தலைசுற்ற
வெளித்தள்ளுகிறது
கனவு

லட்சியக் கனவு
என்பதெல்லாம் பொய்
கனவுகள் மட்டும் தான்
மெய்

இதயத்தின் மனசாட்சி
கனவாய்ப் போய்க்
குடியேறுகிறது

என் கனவுகள்
எப்பொழுதும்
என்னைத் துரத்தும்

நான் கண்மூடி
மரணித்து விட்டால்

என் துன்பத்திற்கு
யார் காரணமோ
அங்குப் போய் குடியேறும்

அவன்
தூக்கத்தைத்
தொலைத்தாவது
உயிர்வாழும்


Thursday, August 5, 2010

இறைவன் வந்தான்



                                                     இறைவன் வந்தான் 










ஒரு நாள்
இறைவன் வந்தான்
ஆகா என மகிழ்ந்து போனேன்
என்ன வேண்டும்? என்றேன்
உண்மையாய் இரு
உனக்கென்ன வேண்டும்? என்றான்.

பாரதியை போல்
பத்து பதினைந்து தென்னை
பத்தினிப்பெண்
என்றேன்
தந்தேன்
என்றான்
சென்றான்


இன்னொரு நாள் வந்தான்
மீண்டும் என்ன வேண்டும்?
என்றான்
தயங்கியபடி சொன்னேன்
கொஞ்சம் காசு பணம், பதவி
நிறைய கொடுத்துச் சென்றான்

ஏதோ சிந்தனையில் இருந்தேன்
என்ன ஆச்சரியம் அடடே
என் இறைவன் ‘நலமா எனக்கேட்டான்’
அழுவதைப் போல் சொன்னேன்
“என் பழைய வாழ்க்கை”

இன்னும் சிறிதுநாள் சென்றால்
இதுவும் உன் பழைய வாழ்க்கைதான்
இன்றே இன்பமாய் இரு
எனச்சொல்லிச் சிரித்து
காற்றில் கரைந்து போனான்

இதற்குப் பிறகு நானும்
அவனைத் தேடவில்லை
அவனும் என்னிடம் வரவில்லை.





வார்த்தை



                         










தெறித்த வார்த்தையில்
ஜனித்த வரலாறு ஏராளம்.

கூனியின் ஏளனம் இராமாயணம்
பாஞ்சாலியின் ஏளனம் மகாபாரதம்.

இந்த‘வார்த்தை’
நாயகனாய்
வலம் வந்ததை விட
வில்லனாய் திரிந்தது தான்
ஏராளம்.

சூடான வார்த்தைக்கு முன்னால்
உடன்படிக்கைகள்
ஊனமுற்ற குழந்தைகள்

தொண்டைக்குள் சிக்குவதெல்லாம்
அன்பின் வார்த்தைகள்
கொட்டித் தீர்ப்பதெல்லாம்
பிரிவின் அடையாளங்கள்

காற்றில் கரைந்து போகும்
இந்த வார்த்தைகள் தான்
சில நேரங்களில்
நெஞ்சு நின்று போகச்
செய்து விடுகிறது.
வார்த்தைகளின்றி
உன் நெஞ்சும்
என் நெஞ்சும்
பேசிக் கொண்டால்
உறவுகள் என்றுமே
சுகம் தான்.

Monday, July 26, 2010

என் உயிர் (ஊர்) தோழர்களே













என் ஊரின் தோழர்களே
தயவுசெய்து
என் எதிர் வராதீர்
வந்தால்
என்னிடம் ஏதும் தகவல்
சொல்லாதீர்

வகுப்பறை விட்டு ஓடி
வாய்க்காலும் நதியுமாய்
நான் திரிந்த கதை ஏராளம்

இன்னும் என்னென்னவோ
என் நெஞ்சில் வடுவாய்
வேண்டாம் தோழர்களே
என் எதிர் வராதீர்

என் வீடு
முற்றம், தோட்டம்
நான் அமரும் நிலைவாசல்
ஊர்ப் பெரிசுகள்
வந்து கதைபேசும்
திண்ணை
என நான்
வாழ்ந்த கதை சொல்லும்
என் ஊர்த் தோழர்களே

உங்களுக்காகச் சொல்கிறேன்
என் மனதில் ஓடுவதெல்லாம்
வீட்டை விற்று
வீழ்ந்த கதையும்
பஞ்சமாய்
பாண்டவர்கள் போல்
திரிந்த கதை
மட்டுமே

எனவே தோழர்களே
என் எதிர்
வராதீர்.




Wednesday, July 21, 2010

மனைவி





மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள்
இனி எனக்கென்ன கவலை
தற்காலிக விடுதலை
இனி இல்லை இல்லாள் தொல்லை
ஏன்? எப்படி? எதற்கு? போன்ற
தொலைத்தெடுக்கும்
தொல்லை கேள்விகள் இல்லை
நித்தம் ஓர் உணவு விடுதி
வகை வகையான உணவு
இஷ்டம் போல் எழலாம்
எட்டு மணிக்கு
கோயில் சாமி
கொடுமையும் இல்லை
கட்டுகள் அவிழ்க்கப்பட்ட
காளையாய்த் திரியலாம்
நினைத்த போது சினிமா
சத்தமாய் பாட்டு
வீடே அதிரும் படி
எம்பிக் குதிக்கலாம்
ஆனாலும்
அளவு தெரியாமல்
குறைத்துச் சாப்பிட்டதால்
அதிகாலைப் பசியில்
உருளும் போது
உள் மனசுக்கு மட்டும் தெரியும்
அவள்  இல்லா
வெறுமையும் வலியும்.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...