Wednesday, September 7, 2016

             உடன்பாடும் முரண்பாடும்  

படிக்காதவர்கள் அரசியலுக்கு வருவதில் -உடன்பாடு
படித்த அதிகாரிகள் அவர்களின் உத்தரவுக்காக காத்திருப்பது -முரண்பாடு

குடிநீர் வரவில்லை என  சாலை மறியல் செய்யும் ஏழைகள் -உடன்பாடு
அவர்களே பணத்திற்காக ஓட்டு போடுவது -முரண்பாடு

அனைவரும் வாக்களிப்பது கடமை -உடன்பாடு
அதே மக்கள் ஊழல்வாதியை  திரும்பப்பெறமுடியாது -முரண்பாடு

மக்களைப்  பாதுகாப்பது அரசின் கடமை -உடன்பாடு
அணுகுண்டு வீசி போரினால் அழிப்பது -முரண்பாடு

சந்தோஷத்தில் கூடும் உறவுகள் -உடன்பாடு
சங்கடத்தில் காணாமல் போவது -முரண்பாடு

ஆணாதிக்கம் பற்றி பெண்கள் பேசுவது -உடன்பாடு
அவர்களே தன்  அப்பாவைப் பற்றி பெருமை பேசுவது -முரண்பாடு

திருமணமான தன் மகள் மீது தாய்க்கு அக்கறை -உடன்பாடு
அவளே தன் மருமகளை படுத்தும் பாடு -முரண்பாடு

அர்த்தத்தில் எப்போதும் -உடன்பாடு
கற்பனையான உள் அர்த்தத்தில் - முரண்பாடு

பணக்காரர்கள் உதவி செய்கிறார்கள் -உடன்பாடு
உதவி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல -முரண்பாடு

மிருக வதைச் சட்டம் - உடன்பாடு
கோயில் யானையை அங்குசத்தால் குத்தி பிச்சை எடுப்பது - முரண்பாடு

இறைவழிப்பாடு உள்ளவர்கள் நல்லவர்கள் -உடன்பாடு
இறைவழிப்பாடு முடித்து ஊழல் வழக்குக்கு  செல்பவர்கள் -முரண்பாடு

பிடித்த மதத்துக்கு மாறலாம் -உடன்பாடு
பிடித்த சாதிக்கு மாற முடியாது -முரண்பாடு

பன்னிரெண்டாம் வகுப்பு  வரை இலவச கட்டாய கல்வி -உடன்பாடு
அதன்பிறகான படிப்பு பல லட்சம் -முரண்பாடு

லைசன்ஸ், ஆர்.சி புக் இல்லையேல் அங்கேயே நடவடிக்கை -உடன்பாடு
ரௌடிகளுக்கு மட்டும் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை -முரண்பாடு

பட வெளியீட்டு பிரச்சனை ஒரு மணி நேரத்தில் தீர்ப்பு -உடன்பாடு
பாமரனின் வழக்கு கால்நூற்றாண்டுக்கு இழுத்தடிப்பு -முரண்பாடு

உடன்பாடும் முரண்பாடும் இல்லாமல்
எல்லாமே உடன்பாடாகும் காலம் வருமா ?



  








Sunday, August 14, 2016

                             பயணம் 

அன்பை அள்ளிக்கொடுத்து
அன்பிற்காக ஏங்கி நிற்பது
அருவறுக்கத்தக்கது

ஒவ்வொரு கிளையாக
பட்டுப்போவதுபோல்
ஒவ்வொரு உறவையும் விட்டு
விலகுகிறேன்

எனது முகமூடி கூட
என் பேச்சைக்  கேட்பதில்லை
எனக்கே தெரியாமல் கழண்டு விழுகிறது

பிரிவிற்கான காலத்திற்காக காத்திருப்பது
மிகுந்த வலியைத்தருகிறது

கடமை கடமை என துரத்தும் போது
கடனே என வாழ நேர்கிறது

யார் யார் ஏவலுக்கோ
நடனமாடும் பொம்மையாய்
வாழ்வில் கழிவிறக்கம் திண்கிறது

எதையோ தேடி எதையோ தொலைத்து
இன்னும் எத்தனை தூரம் பயணிக்க
என்ற பெருமூச்சுடன் நகர்கிறது
என் காலம் .


Thursday, July 21, 2016

                       ஜன்னலுக்கு வெளியே

முதல் அறிமுகம் , முதல் முத்தம் போல்
முந்தைய சந்திப்புகள் தித்திப்பாய் நகர்ந்தன .

இரவின் நீளம் ,  அதிகாலைக் கனவு
என அதிகம் பகிர்ந்து கொண்டோம்

சில பொழுதுகள் செல்பேசிகள் மட்டுமே அறிந்த
செல்ல சிணுங்கல்கள்

நித்தம் ஒரு உடையில் தேவதையாய் நீ
அந்த சந்திப்பில் தொட்டு பேசும் எண்ணமும்
தொடாத நாகரிகமுமாய் நான்

சில நாட்களாய் சிணுங்கவில்லை
உன் செல்பேசி

பேச்சில் ஏதேனும் காயப்படுத்திவிட்டேனோ!
மிகுந்த ஒத்திகைக்குப் பின் ,எச்சரிக்கையுடனும்
ஒவ்வொரு வார்த்தையாக உதிர்க்கிறேன்

ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை  பார்ப்பதுபோல்
பாவனை செய்கிறாய்

முறிந்து போன  காதலால் மௌனத்துடன்
வெளியேறுகிறேன் நான்

அதன் காரணத்தையாவது
நீ கூறியிருக்கலாம் .







Tuesday, April 12, 2016

                             மனதின் ஓசை 

நிசப்தம் ,மௌனம்
தனிமை ,ஓசையற்ற இருள்
பாலைவனத்தின் ஒற்றை மனிதன்
ஆளில்லா தனித்தீவில் நான் மட்டும்
நீ சினங்கொண்டு சீறியிருந்தால்
உன் குணம் கண்டு
குறை தீர்த்திருப்பேன்
விவாதம் இல்லை
தீர்வும் இல்லை
எங்ஙனம் என் நிலை உரைப்பேன்
எங்கே என் நிலை உரைப்பின்
ஒற்றை அலட்சிய பார்வையால் வீழ்த்துவாயோ
என்ற அச்சத்தில் நானும் மௌனமாய்
நாட்கள் நகர்கிறது
எத்தனை நாட்கள் இப்படியே .......?
நீ என்னை விட்டு விலகுகிறாயா ? என்பது எனக்குத் தெரியாது -ஆனால்
நான் உன்னை விட்டு மெல்ல விலகுகிறேன் என்பது மட்டும் தெரியும் .



Sunday, March 27, 2016

                          விட்டுக்கொடுத்தல் 

எனக்குப் பிடித்த பொம்மையை
தம்பி விரும்பியதற்காக விட்டுகொடுத்திருக்கிறேன்

பாகம் பிரிக்கையில் நான்   படித்தவன் எனக்கூறி
அத்தனையும் சகோதரனுக்கு எழுதுகையில் விட்டுக்கொடுத்திருக்கிறேன்

பதவி உயர்வு வரும்போது சக அலுவலருக்கு கொடுத்துவிட்டு
ஓரமாய் கைதட்டிய வேளையில் விட்டுகொடுத்திருக்கிறேன்

பெண்வீட்டாரின் பொய்களை நம்பி
பலவற்றை விட்டுக்கொடுத்துருக்கிறேன்

அப்பாவின் மருத்துவ செலவில் அத்தனைபேரும்
அமைதிகாக்கையில் கடன்பட்டு காப்பாற்றியநாளில் விட்டுக்கொடுத்திருகிறேன்

ஆனாலும் ..

நான் விரும்பிய பொம்மை கிடைக்காத நாளில்
இரகசியமாய் அழுதிருக்கிறேன்

வேலையில்லாமல் தெருத் தெருத்தெருவாய் அலைந்தநாளில்
அண்ணனின் கேலியில் உள்ளே குமைந்த்திருக்கிறேன்

பதவி உயர்வு பெற்றவன் அடிக்கடி என்னை ஏவி
வேலையிடும் போது அவன் உள்மனம் கண்டு புழுங்கியிருக்கிறேன்

ஏமாற்றிய பெண் வீட்டார் இன்னும் நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்
என்று சொல்லும் வேளையில் உள்ளே நொறுங்கியிருக்கிறேன்

சகோதரர்கள் திட்டமிட்டு வீழ்த்திய வலையில்
நான் கடனாளியானதால் கலங்கியிருக்கிறேன்

விட்டுக்கொடுத்தல் என்பது
ஏமாளித்தனம்  என உறைக்கையில் -உறைகிறேன் .

Monday, March 21, 2016

                       நிலா 
முழு நிலா அன்று
 என்னையே பார்ப்பதாய் ரசிக்கிறேன்

மேகங்கள் மறைத்துக்கொள்ளும்
வேளையில்
ஏமாற்றமடைகிறேன்

சில நேரங்களில்
மேகத்திலிருந்து பாதி
 தெரிகையில் மிகுந்த அழகாய்
உணர்கிறேன்

தினம் தினம் நிலவை ரசிப்பது
பழக்கமாக மாறிவிட்டது

நிலா வருவதும் போவதுமாய்
இருக்கையில்
உணர்ச்சியின் கலவையாய்
மாறுகிறேன்

ஒரு அமாவாசையில் வராது நிலா என தெரிந்தும்
வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டேஇருக்கிறேன்

நிலாவின் பெயர் மட்டும்
மூளைக்குள் புகுந்து
இறங்க மறுத்து இம்சிக்கிறது

என் காலம் மட்டும் கறைகிறது .

Monday, February 29, 2016

                                                          அலை

எனக்கு குளிர்தாங்கவில்லை
உனக்கு கம்பளி போர்த்துகிறேன்

நீ சினங்கொண்டால்
உன் இருதயம் தாங்காதே
அமைதியுருகிறேன்

உனக்கு பிடிக்குமென்பதால்
என்னை தாழ்த்திக்கொள்கிறேன்

எங்கேயும் உன்னோடிருந்தால்
மகிழ்வாய் என்பதால்
உன்னுடனேயே இருக்கிறேன்

ஒரு துறவிக்கு எதற்கு மகுடம்
என உனக்குச் சூடி அழகு பார்க்கிறேன்

எல்லா காலங்களிலும் உன்
கண்களில் கவலையை காண்கையில் நான்
கவலையில் ஆழ்கிறேன்

நீயும் நானும் கடற்கரையில்
கால் நனைக்கச் சென்றோம்
உன் கரம் பற்றி  நிற்கிறேன்

இறுக்கிப் பிடிக்கிறீர்கள் என கரம் உதறி
சுதந்திரமாய் வாழவிடுங்கள்
என்ற ஒரு சொல்லோடு
கரையை நோக்கி வேகமாய் நடக்கிறாய்

எங்கோ தவறிழைத்து விட்டோமா
என கலங்கி நிற்கிறேன்

ஓயாத சத்தத்துடன்
மனதிற்குள் அடிக்கிறது அலை .



Friday, February 19, 2016

                           காதலுக்கு முன்பும் - பின்பும் 

முன்பெல்லாம் விழிகள் விரியும் பார்வையால் வீழ்த்துவாய்
தற்பொழுது வெற்று பார்வை வினா வாக்கியத்தால் கொல்கிறாய்

முன்பெல்லாம் அலைபேசி அழைப்புக்காய் காத்திருந்த தருணங்களை வியப்பாய்
தற்போதெல்லாம் நான் அழைத்தாலும் எதிர்முனையில் ரிங்டோன் மட்டுமே  பதிலாய்

எல்லா நாளும் இப்படி கழிந்தால் எப்படியிருக்கும் - அப்போதைய மொழி
நத்தையாய் நகர்கிறது இந்த ஜென்மம் எப்படி கழியும் என்பாய் நீ?

உன்னோடு நடக்கையில் எத்தனை சுகம் அப்போது சொன்ன மொழி
தற்போது ஐந்தடி இடைவெளியில் அறைந்து சாத்தப்படும் கதவு எதையோ உணர்த்துகிறது

ஒற்றை ரோஜாவில் அப்படி ஒரு சந்தோஷம் அப்போது
எனக்கென ஏதுமின்றி பூங்கொத்துடன் மண்டியிட்டு கேட்கிறேன்
நீ மௌனமொழி உதிர்க்கிறாய்

முன்பிருந்த காதல் மனம் சார்ந்தது
தற்பொழுது மூளையோடு தொடர்படுத்தப்பட்டதால்
அடிக்கடி தொடர்பு எல்லைக்கு அப்பால் நீ

எதுவும் மாற்றத்துக்கு உரியது- உன் எண்ணம்
என்றைக்கும் மாறாதவன் நான் - அங்குதான் முரண்பட்டேன்

பூமி ஒன்று , வானம் ஒன்று
வாழ்க்கை ஒரு முறை வாழ்வோம் இறுதிவரை

இப்பொழுதும் ஒற்றை ரோஜா அல்ல
ஒரு பூந்தோட்டத்துடன்  காத்திருக்கிறேன்
சின்னதாய் ஒரு புன்னகை பூத்திடு .







    

Saturday, January 23, 2016

அந்த நாளில் 

என் மேல் கல்வீசியவன் மீது
ஒரு சொல் வீச முடிந்ததில்லை - அந்த நாளில்

விளையாட்டாய் சொன்ன சொற்களை
காத்திருந்து வலைபின்னி வீழ்த்தியவனை நினைக்கும் - அந்த நாளில்

இனிக்க இனிக்க பேசி எல்லாம் கைப்பற்றி
ஏளனம் செய்தவனை நினைக்கும் - அந்த நாளில்

குற்றம் சுமத்தப்பட்ட தருணத்தில்
திடீரென எதிரியாய் மாறிப்போன நண்பனை நினைக்கும் - அந்த நாளில்

எத்தனையோ துன்பம் கொடுத்தவனை
தூக்கிப்பிடித்திருக்கிறாயே ஏன்? என்ற வினா எழும் - அந்த நாளில்

சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக்கொண்டு
பெருந்தவறாய் மாறியதும் உறவை துண்டித்துக் கொண்டபின்
சிறு தவறில் சரிசெய்திருக்கலாமோ என என்னும் - அந்த நாளில்

இதுவரை வாழ்ந்த வாழ்வு வெற்றியா? தோல்வியா?
என்ற குழப்பம் வரும் - அந்த நாளில்

"உறக்கம் வருவதில்லை  எனக்கு"

வாழ்வின் அர்த்தமென்ன?
வாழ்தல் மட்டுமே - அந்த நாளில்

"உறக்கம் வந்தது  எனக்கு".




       

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...