Saturday, December 13, 2014

                       கேள்விகள் 

என் 

வண்ணக் கனவுகளில்
கருப்பு மை பூசியது யாரோ

நேற்று வரை இருந்த உறவை
நின்று போக செய்தது யாரோ

நினைத்து மகிழவேண்டியவை மறந்து தொலைவதும்
மறக்கவேண்டியவை மனதை அறுப்பதும் ஏனோ

நான் வகுத்த பாதை வேறு
பயணிக்கும் பாதை வேறானது எப்படி

ஊருக்கெல்லாம் தெரிஞ்ச சேதி
அவளுக்கு மட்டும் தெரியாம போனது எப்படி
நான் நேசிச்ச மண்ணு
என்னை ஏன் நிராகரிக்கணும்

எதுவும் இல்லாத போது வந்த தூக்கம்
எல்லாம் இருக்கும் போது
ஏன் வர மறுக்கணும்

இப்படி
விடையில்லா கேள்விகள்
எனக்குள் மட்டுமா
எல்லோருக்குள்ளும் உண்டா ?

        

Wednesday, September 10, 2014

                            நீ ...நான் ...




நீ வாரி இறைத்த சொற்களில்
என்னைத் தொட்டவை  சில
என்னைச் சுட்டவை சில

மகரந்த தேடல் மயக்கத்தில்
இதமாய் காற்றில் வீசும் என்னைத் தொட்ட சொற்கள்
மயக்கம் கலைகையில்
மெல்ல மேலெழும் என்னைச் சுட்ட சொற்கள்

 உன் புன்னகை நினைக்கையில்
இந்த பூமி எனதானது
உன் கோபம் நினைக்கையில்
பள்ளத்தாக்கின் விளிம்பில் பதியும் பாதம் எனதானது

மணிக்கணக்காய் பேசிய அன்பு
நிமிடங்களில் அர்த்தமற்ற ஊடலில் அழிந்தது

சந்திக்க காத்திருந்த நாட்களின் சுகம்
உன் தனிமை வேண்டுதலில் தகர்ந்துபோகிறது

எனக்குத்  தெரியும்
எரியும் தீயும் நீதான்
உருகும் மெழுகும் நீதான் .




Sunday, April 6, 2014

                      கடிதம் 
ஒவ்வொரு கடிதமும் 
ஒரு நாவலாகவோ அல்லது 
ஒரு கவிதையாகவோ 
உயிர் பெறும் 

மூளையை கசக்கிப் பிழிந்து 
உணர்வுகளை கொட்டித்தீர்ப்பது 
கடிதத்தில் 

தேர்வுக்கட்டணம் ,project work என 
தெரிந்தே எழுதப்படும் பொய் 
மகனின் கடிதம் 

புகுந்த வீட்டின் பெருமை பேசி 
பிறந்த வீட்டின் அருமையை 
மறைமுகமாக வெளிப்படுத்துவது 
மகளின் கடிதம் 

காதல் கடிதங்களும் ,தேர்வு முடிவுகளும் 
கட்டுக்களைப் பிரிக்கையிலேயே 
தபால் அலுவலகத்திலேயே 
மடக்கிப் பிடிக்கப்படும் 

புத்தகங்களுகிடையே 
புதைத்து வைக்கப்பட்டிருக்கும் 
காதல் கடிதங்கள்
எத்தனை முறை படித்தாலும் 
சலிக்காத கடிதங்கள் 
என்னையும் கொஞ்சம் படித்தால் என்ன என 
ஏங்கும் புத்தகங்கள் 

முதல் நாள் அனுப்பிய காதல் கடிதம்
மூன்றாம் நாள்  பதிலுக்காக 
காத்திருக்கும் காலங்கள் 

காதலி ,மனைவியானால்
கடிதங்கள் உயிர் பெறுமே
அந்த சுகம்
இந்த அலைபேசி உலகில் 
இன்றைய தலைமுறைக்கு கிட்டுமா  
என்பதே என் கவலை . 




Saturday, March 29, 2014

             இறைவன் 

நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பதில்லை
நமக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்கிறான்-இறைவன்

கண்டுபிடிக்க முடியாத கண்ணாமூச்சி விளையாட்டு
கடவுளின் விளையாட்டு

வெற்றியில் நாம் சொந்தம் கொண்டாடிவிட்டு
தோல்வியில் அவனைத் தேடுவதில் நியாயமில்லை

மனிதனின் பிறப்பின் இரகசியம் ,இறப்பின் இரகசியம்
அறிவியல் அறியாது இறைவன்  அறிவான்

சிலருக்கு மாறி ,மாறி இன்பமும்  துன்பமும்
சிலருக்கோ ஒரு பாதி இன்பம்,மறு பாதி துன்பம்
இன்பமும் துன்பமும் அனைவருக்கும் சரிபாதி

இன்பத்தில் சிரிப்பு ,துன்பத்தில் அழுகை
சிரிப்பையும் ,அழுகையையும் தந்தவன் அவனே

இன்பம் நாம் செய்த புண்ணியம்
துன்பம் நாம் செய்த பாவம்

சொர்க்கமும் ,நரகமும் நம் மனம் தான்-அதில்
இறைவனை நினைத்திருந்தால் நிம்மதிதான்.











Thursday, March 6, 2014

                          குழந்தைகள் 


ஒரு குழந்தை  பிறக்கும் போது பூமியில்
ஒரு விண்மீன் முளைக்கிறது

ஒரு கோடி பூக்கள் ஈடாகுமா
ஒரு குழந்தையின் சிரிப்பிற்கு முன்னால்

எத்தனை மொழிகள் இருப்பினும்
ஏங்குவது என்னவோ குழந்தையின் மொழிக்கு

கணவன் -மனைவி சொல் மறைந்து
தந்தை -தாய் சொல் மலர்வது குழந்தையால்

இதுவரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல
இனிதான் வாழ்க்கை என  உணர்த்துவது குழந்தை

எனினும்  என்னுள் எழும் கேள்விகள்
ஏன் இப்படியும் சில பெற்றோற்கள்

நாய்க்குட்டியை வீட்டில் வளர்த்தும்
பிள்ளையை விடுதியிலும் விடுகிறார்கள்

கல்வி முக்கியம் அதைவிட
குழந்தைகள் முக்கியம்  உணர்வதில்லை

இவர்கள் தாண்டாத உயரம்
பிள்ளைகள் தாண்ட ஏனோ நிர்பந்திக்கிறார்கள்

புத்தகங்கள் மட்டுமே அறிவு என
தவறான புரிதலில் தண்டிக்கிறார்கள்

சில அப்பாக்கள் ஏனோ
உயர் அதிகாரிகள் போல் உத்தரவிடுகிறார்கள்

குழந்தைகள் பாறைகள் அல்ல
உளி கொண்டு செதுக்குவதற்கு

அவர்கள் ஓவியங்கள்
தூரிகையால் வண்ணமிடுங்கள் .


      

Sunday, March 2, 2014

           எனக்கு மட்டுமே தெரிந்த வலி 


மூளை முந்திய நிகழ்வுகளில்
மூழ்கிப் போகிறது

முட்களில் நடந்து நடந்து
பூக்களில் நடக்கையிலும் இரத்தம் கசிகிறது

நினைவு தப்பிய நாட்களிலும்
அவ்வப்போது வந்து போயின
அந்த கருப்பு நாட்கள்

வாழ்க்கையின் பயணத்தில்
நெடுந்தூரம் பயணித்த பின்னும்
 பழைய நிகழ்வுகளிலேயே நிற்கிறது என் மனம்

இப்படி நடந்திருந்தால்
இப்படி நடக்காதிருந்திருந்தால்
என்ற போராட்டம்
என்னுள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

வசந்த காலம்  வந்த பின்னும்
இவனுக்கு மட்டும் இலையுதிர் காலம்.



Wednesday, February 5, 2014

              பார்வையாளன் 

மேடையில் அமர்ந்தனர்
மேதாவிகள்-
அந்த 
முக்கிய புள்ளிகள் 
ஒருவரை ஒருவர் 
முத்து முத்தாய் புகழ்ந்தனர் 
ஒரே சால்வை 
பல அவதாரம் எடுத்தது மேடையில் 
உள்ளே பகை வைத்து 
வெளியே புகழ்ந்த கதை அறியாது
கரவொலி எழுப்பி 
களிப் புற்றான்
பார்வையாளன். 


   

Friday, January 17, 2014

                           மனிதாபிமானம் 

என்
இதயம் உடைத்து 
இன்பம் கண்டவன் 

என் 
ஆயுள் ரேகை அழிக்க 
ஆசை கொண்டவன்

 என் 
பகலை இருட்டாக்கி
விழிகளை பறித்துக்கொண்டவன் 

என்னை 
கர்ணன் என வர்ணனை செய்து 
கைப்பொருளை களவாடியவன் 

என்னை எனக்குள் 
சிறை வைத்தவன் 

துரோகம் இழைத்து என் 
தூக்கம்  கலைத்தவன்  

எனினும் 
என்னுள் இன்னமும் 
மிச்சமிருக்கிறது
மனிதாபிமானம் .  



Friday, January 3, 2014

                தேடல்                        



எண்ணக் கலவை 
என்னைத் தின்றது 
எழுத்தில் பகிர்கிறேன் 
என் நிலை உணர்க

உறவுகள் தேடி அலைந்தேன் 
ஒட்டிக்கொள்ளும் அட்டை என்றது 
உறவுகள் உதறி தள்ள 
ஒதுங்கி நின்றேன் 
பாசமில்லா பதர் என்றது 

வசதியில் கொஞ்சம் நாள்
வாழ்ந்து பார்த்தேன் 
பட்டினி கிடந்தவனுக்கு 
பல்லக்கு தேவையா  என்றது

உண்மையாய் இருந்தேன் 
உரசிப்பார்த்து போலி என்றது 
போலியாய் வாழ்ந்தேன் 
உரசாமல் அசல் என்றது 

பிறருக்கு உதவினேன் 
விளம்பர யுக்தி 
விளகிக்கொள்  என்றது 

கருமியாய் நானும்
காலம் கழித்தேன் 
விளம்பரம் வெளுத்தது என்றது 

அனுபவம் பெற்று 
அறிந்ததைச் சொன்னேன் 
பொய் உரைக்கிறான்
போதும் என்றது

தேடலில் இருந்து பெறுவது 
தெளிதல் என்றேன் 
குழம்பிப் போனவன் 
குழப்புகிறான் என்றது

மனிதனிடமிருந்து  விலகிக்கொண்டேன் 
இயற்கையோடு நேசம் கொண்டேன் 
வாழ்க்கை இனிது 
வாழும் ஆசை கொண்டேன்.  









   

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...