Tuesday, December 22, 2015

கணித மேதை இராமானுஜன் 
(கணித மேதை  இ ராமானுஜனின் பிறந்தநாளை ஒட்டி எழுதிய கவிதை )


கடலில் பறந்த பறவையோ -நீ

கணித கடலை அளந்த மேதையோ

நோய்கள் வந்து போன பின்னும்
உள்ளம் நொந்து போனதில்லையோ

வறுமை வந்த போதும் -உன்
திறமை குறைந்ததில்லையோ

கல்லூரி மாணவன் ஐயம் தீர்க்க 
பள்ளி மாணவன் நீ பயன்பட்டாயே

கணித மேதை கணக்கராய் ஆனபோது
உன் உள்ளம் அழுததோ அறியோமே

இங்கு உன்னைக் கொண்டாட யாருமில்லையோ
இங்கிலாந்திலிருந்து ஹார்டி வந்தாரோ

கேம்பிரிட்ஜ் மாணவன் ,F.R.S.பட்டம்
இதையும் தாண்டி இம்மண்ணின் மேல் பாசம்

காசநோய் எனும் காலன்
உறங்காத உன் ஆராய்ச்சிக்கு நீள் உறக்கம் தந்தனவோ .


Thursday, December 3, 2015

              யாரிடமாவது....

நீண்ட நேரமாக
அலைபேசியை
கையிலேயே வைத்திருக்கிறேன்
யாரிடமாவது பேசவேண்டும் 

அப்பாவிடம் பேசலாம்
அழத் தோன்றும் 

அண்ணனிடம் பேசலாம்
வார்த்தையில் விஷம் வைப்பான் 

நெருங்கிய நட்பு வட்டம்
"மக்கள்  அனையர் கயவர் "

அலுவலக நண்பர்
அடுத்த நாள் சந்திக்க வேண்டிய கத்தி பற்றி
தகவல் தருவார் 

தூரத்து நண்பன்
தொந்தரவாய் எண்ணுவான் 

என் ஊர் தோழன்
நான் வீழ்ந்த கதையை
நினைவுபடுத்துவான் 

அலைபேசியை
அணைத்துவிட்டு
உறக்கம் தொலையும்
இரவுக்காக காத்திருக்கிறேன் .

Friday, November 27, 2015

      20 தேதிக்குப் பிறகு சம்பளக்காரன் .


மாதக்கடைசியில் வைக்கப்படும்
திருமண அழைப்பிதழ்
"29 ம் தேதி ஞாயிறு  தாங்க
கண்டிப்பா வந்துடுங்க "
29 ன்னு ஆனப்புறம்
எந்தக் கிழமையா இருந்தா என்னடா
என பொங்கும் கோபம் .

110 விதியின் கீழ் வெளியிடப்படும்
அறிக்கையைப் போல்  நீளும்
மனைவி வாசிக்கும் மளிகைப்  பட்டியல்
படிக்கிற காலத்துல அரியர் வச்சதால இந்த நிலை

இரண்டு மாதமா வராத அரியர்
இப்போதாவது வரக்கூடாத  எனற அல்ப ஆசை

மாத்திரை தீர்ந்திடிச்சு
டாக்டர பார்த்தா 1000 க்கு மருந்து எழுதுவாரு

அவரு பேமெண்ட் சீட்ல படிச்சாரோ,
என்னவோ என்ற சந்தேகம்

"ஏங்க கேஸ் தீர்ந்திடிச்சி "
ஏதோ காதிலே விழாத மாதிரி

தீவிர வாசகனாய் புத்தகத்தில்
மூழ்கிப்போவது

குழந்தைகள் பேயைப் பார்த்த மாதிரி
என்னைப் பார்த்து பயந்து ஒளியுது

இனி எந்த பே கமிஷன் வந்தால்
 இந்த  நிலை மாறுமா 

Tuesday, July 28, 2015

கனவுகளின் நாயகன் 
எளிமையினால் எங்கள் 
இதயம் வென்றவர்

கடலையும்,நிலத்தையும் ஒருங்கே கண்டு வளர்ந்து 
வானத்தையும் அளந்து பார்த்தவர் 

அணுகுண்டு தயாரிப்பினூடே அடிமனதில்
ஆழமாய் வேரூன்றிப்போன மனிதாபிமானம் 

அறிவுத் தேடலும்,ஆன்மீகத்தேடலும்
ஒருங்கே பெற்றதால் வானம் வசப்பட்டது

செல்லுமிடமெல்லாம் ஆசிரியரின் பெருமை சொன்னவர் 
சொன்னதில்லை ஒரு நாளும் அவரின் பெருமை 

அழகான ஜனாதிபதி மாளிகை 
அலங்கரிக்கப்பட்டது அவரால் 

மாணவர்கள் அறிவைத் தேடிச்செல்வது இயல்பு 
மாணவர்களிடம் அறிவே தேடிச்சென்றது வியப்பு 

மதநல்லினக்கத்துடன் வளர்த்த 
தந்தையும் தாயும் கிடைக்கப்பெற்ற வரம் அவருக்கு 

இந்தியர்களின் மதநல்லினக்கம் இப்படி என 
உலகுக்கு உணர்த்த எங்களுக்குக் கிடைத்த வரம் அவர் .




         

Thursday, April 2, 2015

தலைப்பிடப்படாத கவிதை 


மகன் தேர்வு எழுதுகையில்
அவ்வபோது வந்துபோகிறது
என் அப்பாவின் முகம்  

Wednesday, January 21, 2015

          தொடரும் 


நான் சொல்ல முற்படுகையில்

நீ முகத்தை திருப்பிகொள்வதும்
நீ சொல்ல எத்தனிக்கையில்
உன்னைப் போலவே நானும் நடந்து கொள்வதும்
பழைய அன்பையெல்லாம்
புரட்டிப்பார்த்து புதிய நடைமுறையை
மாற்ற நினைக்கையில்
நீ இயல்பாய் இருப்பதாய்
"உன் கற்பனைக்கு என்னால் பதில் சொல்ல முடியாது "
என நழுவி நகர்வதும்
மூன்றாம் நபரின் உதவியை நாட
முயல்கையில்
"நமக்குள் என்ன நடந்துவிட்டது ?
நடுவர் எதற்கு?
"என சண்டை நீளுமோ
என்ற அச்சத்தில்
பழைய அன்பு தொடராதா?
என்ற ஏக்கத்தில்
எதுவும் நிரந்தரமல்ல
அந்த அன்பு
இந்த கோபம்
அந்த நாட்கள்
இந்த வாழ்வு
எல்லாம் மாறும் 
என சமன் செய்துகொண்டு
உன்னோடு தொடர்கிறேன்
என்  உறவை .






Wednesday, January 14, 2015

                    உழவர் திருநாள் 

விளைவிக்கிறவன் விவசாயி
விலை வைக்கிறவன் வியாபாரி 
படிச்சவன் வேலை நிறுத்தம் செஞ்சி
சம்பளத்தை கூட்டுறான் 
உழைச்சவன் வேலை செஞ்சி
கஞ்சியைதான் குடிக்கிறான்  
அம்பத்தெட்டு வயதுக்கப்புறம் 
ஓய்வாய் இருக்க ஊதியம் 
ஐந்தாண்டு காலத்துக்குள்ள
ஏழு தலைமுறைக்கு சொத்து  
ஜெயிச்சா சில கோடி
தோற்றா பல கோடி 
கம்பெனி லாபம், பங்கு சந்த வீட்சி 
கணக்கு காட்டி காசு சுருட்டும் கூட்டம் 
இது எதுவும் தெரியாத உழைப்பாளி
உலகத்துக்கு சோறு போடும் விவசாயி 
பருவம் தப்பி மழை பொழிஞ்சாலும்
காவிரி வர மறுத்தாலும் 
இதை எதையும்  கண்டுக்காத சாமிக்கு  
சக்கரைப் பொங்கல் படைக்கும்  
பொன்னான நாள்தான்
பொங்கல் திருநாள். 


மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...