எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர வேலை
எல்லாம் இனிப்பாகத்தான் இருந்தது
திருமணமாகாதவனின்
தேனிலவு கனவுபோல
வேலை நேரத்திற்கு மேலான
இரண்டு மணிநேர வேலை
எதுவும் கேட்கமுடியாது
விதிமுறை பற்றி பேசினால்
விதிமீறல் நடவடிக்கை
பாயுமோ என்ற அச்சம்
அவசரமாய் ஒன்பது மணிக்குள்
விரல்ரேகை வைக்கையில்
நேற்றைய அதிகப்படியான வேலையின்
நினைவு அழுத்துகையில்
படித்தும் ரேகை வைக்கும்போதே தோன்றும்
படித்தாலும் நான் பாமரனே
இரவு எட்டு மணிக்கு உண்டுவிடு
ஒன்பது மணிக்கு உறங்கிவிடு
இல்லையேல் நேரத்துக்கு செல்லமுடியாது
உயர் அதிகாரி திட்டுவார்
என்னுடைய உறக்கமும்
விழிப்பும்
என் வசமில்லை
என்ன வாழ்விது
கவனித்து உதிர்த்தும்
ஏதோ ஒரு சொல்லில்
தவறிருக்குமோ
விளக்கம் தர நேருமோ என்ற
குழப்பம்
குழந்தை , மனைவி
உடல் நலம் குறித்த
எந்த விளக்கமும்
ஏற்க தக்கதல்ல
நான் என்பது
நான் மட்டுமல்ல
எப்படி உணர்த்துவது
வேலைப்பளு
விட்டுவிடலாமோ
"வேலை இல்லாதவனின்
ஒரு நாள் பொழுது "
நினைவில் வந்துபோக
வேலை மீண்டும் என்னை
இழுத்துப்போகிறது .
No comments:
Post a Comment