விலங்கு நடந்தால் காடு செழிக்கும்
மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா
வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது இதுவரை உண்டா
சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் மனிதருண்டு
சிரித்துக்கொண்டே கழுத்தை கடித்த சிங்கம் கேள்விப்பட்டதுண்டா
அடுத்த வேளை உணவுவரை விலங்குகள் வேட்டையாடுவதில்லை
அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்க்காதா மனிதனுண்டா
தான் வாழும் காட்டை விலங்கு வாழ வைக்கும்
தான் வாழும் நிலத்தை மனிதன் வாழ வைத்தானா
குழந்தையை வெறுத்த மனிதனுண்டு
குட்டியை வெறுத்த விலங்குண்டா
விலங்கு நேரடியாக தாக்கும் மனிதரைப் போல் வலை பின்னி வீழ்த்துமா
அது கூட்டமாக கூடி வாழும் கூடி உண்ணும்
மனிதன் கலவரம் தவிர மற்ற நேரங்களில் கூடியிருக்கிறானா
குதிரையை யானையை போருக்கு துணையாக அழைத்த மனிதா
அதன் வேட்டைக்கு துணையாய் என்றாவது உன்னை அழைத்ததுண்டா
நரிபோல தந்திரம் என்றானே
தந்திரம் செய்வது நரியின் குணமல்ல அது மனிதனின் குணம் அறிவோமா
மனிதா வாழ்க்கையைக் கொஞ்சம் விலங்கிடமிருந்தும் விளங்கிக்கொள்...